முதியோர் உதவி குடும்ப அட்டைக்கு அரிசி நிறுத்தம்: ஆட்சியரிடம் மனு
திருப்பருத்திக்குன்றம் பகுதி நியாய விலைக் கடையில் முதியோர் உதவி பெறும் குடும்ப அட்டைக்கு அரிசி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதற்கு தீர்வு காணக்கோரி ஆட்சியரிடம்
திருப்பருத்திக்குன்றம் பகுதி நியாய விலைக் கடையில் முதியோர் உதவி பெறும் குடும்ப அட்டைக்கு அரிசி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதற்கு தீர்வு காணக்கோரி ஆட்சியரிடம் முதியவர்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றம் பகுதியில் பொது விநியோகத் துறையின் கீழ் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கிராமப் பகுதியில் நிரந்தரமாக வசித்து வரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முதியோர்கள் பலருக்கு அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இவர்களுக்கென நியாய விலைக் கடை மூலம் முதியோர் உதவி பெறும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அப்பகுதி கூட்டுறவு நியாய விலைக் கடையில் மாதம் 4 கிலோ அரிசி வாங்கி வந்துள்ளனர். இந்நிலையில், சுமார் 127 பேர் தங்களது ஆதார் எண்ணை குடும்ப அட்டை மூலம் நியாய விலைக் கடையில் பதிவு செய்யவில்லையாம். இதனால், வழக்கமாக வழங்கப்படும் 4 கிலோ அரிசி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து நியாய விலைக் கடையில் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து, அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்று ஆட்சியரிடம் மனு வழங்கினர். பின்னர், அவர்கள் கூறியது: திருப்பருத்திக்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் சுமார் 127 முதியோர்களுக்கு பொருள்கள் வழங்கப்படுவதில்லை. நாங்கள் அனைவரும் 65-75 வயதில் உள்ளோம். வழக்கமாக குடும்ப அட்டை மூலம் வழங்கப்பட்டு வந்த 4 கிலோ அரிசி திடீரென நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கேட்டதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
ஆனால், எங்களில் பலருக்கும் ஆதார் எண் அப்போது இல்லை. தற்போது ஆதார் அட்டை உள்ளது. இந்நிலையில், அதை இணைத்துக்கொண்டு பொருள் வழங்கக் கோரினோம். ஆனால், பொருள்களை வழங்கப்படவில்லை. தொடர்ந்து, அலைக்கழிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, உதவி பெறும் அட்டைதாரர்களாகிய 127 பேரும் எங்கள் பகுதி நியாய விலைக்கடையில் எங்களது ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து, எங்களுக்கு மாதா மாதம் 4 கிலோ அரிசி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.