காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாலாற்றையே முழுமையாக நம்பியிருக்கும் நிலையில், சீமைக்கருவேலம் எனப்படும் வேலிக்காத்தான் மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆற்றின் பெரும்பகுதியையே ஆக்கிரமித்து நீர் ஆதாரங்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது.
தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் அழைக்கப்படுவது பாலாறு. இப்பாலாற்றின் கரையில் வாணியம்பாடி, பள்ளிகொண்டா, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல நகரங்களும் அமைந்துள்ளன. இப்பாலாற்றில் சீமைக்கருவேல மரம் என பரவலாக அறியப்படும் வேலிக்காத்தான் மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆற்றின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து பாழாக்கிக் கொண்டிருக்கிறது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாலாற்றில் குறைந்து விட்டது. வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய கொடிய தாவரமான இது பல வெளிநாடுகளில் நச்சுத் தாவரமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை இன்றிப் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இந்த மரங்களுக்கு உண்டு. மழைநீரை உறிஞ்சிக் கொண்டு நிலத்தடிக்கு நீர் செல்வதை இத்தாவரம் தடை செய்து விடுவதால், நீர் ஆதாரம் முழுவதுமாக பாதிக்கிறது. எந்த இடத்திலும் பிற தாவரங்களை வளர விடாமல், தான் மட்டும் செழித்து வளர்ந்து படரக்கூடிய தன்மை கொண்ட இந்த மரங்கள், நிலத்தை வீணடிக்கும் சக்தி கொண்டவை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவிலிமேடு, ஓரிக்கை, வளத்தோட்டம், குருவிமலை, காலூர், பெரியநத்தம், நெல்வேலி, தேனம்பாக்கம், அஞ்சூர், அங்கம்பாக்கம், தம்மனூர், கீழ்பரமநல்லூர், நெய்க்குப்பம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நீர்ப்பாசனத்துக்குரிய ஏரிகளும், குளங்களும் பாலாற்றை நம்பியே உள்ளன.
பாலாற்றை பெருமளவில் ஆக்கிரமித்து, படர்ந்து, விரிந்துள்ள இத்தாவரங்களின் அடர்த்தியும், அளவுக்கு அதிகமான வளர்ச்சியும் ஏரி மாவட்டமாக இருந்து வரும் காஞ்சிபுரத்துக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் பாலாற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் நீர்வரத்தைப் பெற்று நிரப்பிக் கொள்கின்றன. பாலாற்றுக்கு நீர்வரத்தைப் பெறும் கால்வாய் வழிகளும் முற்றிலுமாக தூர்ந்து சிதிலமடைந்து இருப்பதால், கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்வது பல இடங்களில் தடைப்பட்டுள்ளது.
பல விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் அருகே கீழ்பரமநல்லூரைச் சேர்ந்த விவசாயி சி.வெங்கடேசன் கூறியது:
பாலாற்றை ஆக்கிரமித்திருக்கும் சீமைக் கருவேல மரங்களால் நீர்மட்டம் பெருமளவில் குறைந்து விட்டது. பாலாற்றையே நம்பியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றை முழுமையாக அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. பாலாற்றைச் சுற்றிலும் இவற்றின் அடர்த்தி அதிகமாகி இருப்பது பல சமூக விரோதச் செயல்களைச் செய்ய பேருதவியாக உள்ளது.
அது மட்டுமின்றி பாலாற்றின் பல இடங்களில் நிலங்களையும் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். எனவே மழைக்காலம் வரும்முன் சீமைக் கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றி விளைநிலங்களையும், விவசாயத்தையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.