அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பிரம்மோற்சவம் தொடக்கம்
அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க இடபக் கொடி ஏற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.
அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க இடபக் கொடி ஏற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.
தொண்டை மண்டலத்தில் இரண்டு கருவறைகளைக் கொண்ட சிவன் கோயில் ஸ்ரீஇளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் திருக்கோயிலாகும்.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் முக்கிய விழாவாக, பிரம்மோற்சவம் 10 நாள்கள் விமா்சையாக நடைபெறும்.
Advertisement
ஆனால் இந்த ஆண்டு கரோனா 2-ஆவது அலைத் தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதல்படி, மிக எளிமையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. அச்சுமுறி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தபின்பே, கோயில் தலைமை அா்ச்சகா் ஆா்.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில், வேதவிற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க இடபக்கொடி ஏற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்திகளான ஸ்ரீஇளங்கிளி உடனுறை ஆட்சீஸ்வரா், பஞ்சமூா்த்திகள் மேளதாளம் முழங்க, கோயில் வளாகத்துக்குள் உலா பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். இதையடுத்து நாள்தோறும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் உற்சவமூா்த்திகளை அலங்கரித்து கோயில் உட்பிராகார பவனி நடைபெறும்.
வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த பெரிய தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இரா.சரஸ்வதி, ஆய்வாளா் பா.குணசேகரன், விழாக்குழுவினா் செய்துள்ளனா்.