காஞ்சிபுரம்

100 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

DIN

காஞ்சிபுரம் பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் செல்வதால் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்களை அதிகாரிகள் வெள்ளத்திலிருந்து மீட்டனர்.

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு 1,04,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு காஞ்சிபுரத்தில் பாலாறு வழியாக வந்து கொண்டிருக்கிறது. வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கால் காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் மற்றும் வாலாஜபாத் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி நீர் வழிந்து சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வாலாஜாபாத் சாலைகளில் ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாலாஜாபாத்தில் உள்ள பேருந்து நிலையம், அரசுப்பள்ளி, அரசு பள்ளிக்குரிய விடுதி மற்றும் அரசு மருத்துவமனை ஆகியனவற்றுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

எதிர்பாராத வெள்ளப் பெருக்கு காரணமாக பாலாற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களையும் அதிகாரிகள் படகுகளில் சென்று பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, எஸ்.பி.எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர் செல்வம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், தீயணைப்புத்துறையினர் ஆகியோரும் பெரியநத்தம், திருமுக்கூடல், வெங்கச்சேரி, வாலாஜாபாத்  உள்ளிட்ட  வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு படகுகளிலும், நேரிலும் சென்று பொதுமக்களை பத்திரமாக மீட்டனர்.

குடிநீர் டேங்க் ஆப்பரேட்டரை இழுத்து சென்ற வெள்ளம்...காஞ்சிபுரம் அருகே சின்னஐயங்கார் குளம் பகுதியில் நகராட்சி பம்ப் ஆப்பரேட்டராக இருந்து வந்த கருணாகரன்(51)என்பவர் பாலாற்றில் இழுத்து செல்லப்படுவதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை படகுகளில் பாலாற்றில் பல மணி நேரம் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

வயதான தம்பதியரை முதுகில் சுமந்து கொண்டே நீச்சலடித்து காப்பாற்றிய வட்டாட்சியர்... வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரேயுள்ள 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீரானது முதல் தளம் வரை புகுந்தது. தகவலறிந்து அங்கு வந்த வாலாஜாபாத் வட்டாட்சியர் எஸ்.லோகநாதன் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் பம்ப் ஆப்பரேட்டரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜெ.சி.பி.இயந்திரத்தை வரவழைத்து முதலாவது மாடியில் இருப்பவர்களை மீட்டார். தண்ணீர் அதிக வேகத்தில் வந்ததாலும், ஜெ.சி.பி.இயந்திரம் பழுதானதாலும் உடனடியாக நீச்சல் தெரிந்த இளைஞர்களின் உதவியுடன் மரங்களில் கயிறு கட்டி உடனடியாக பாதை அமைத்து நீந்திச் சென்று 65 வயதுடைய முதியவரை முதுகில் சுமந்து கொண்டே நீச்சலடித்து வந்து அவரைக் கரை சேர்த்தார். பின்னர் அம்முதியவரின் மனைவியை(60) இதே போல மீட்டு கரைக் கொண்டு வந்து சேர்த்தார். பொதுமக்கள் பலரும் வட்டாட்சியரை பாராட்டினார்கள்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு...பாலாற்று வெள்ளம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 1903 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 1903-இல் வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 1,25,00 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது சற்று குறைவாக 1,04,000 கன அடி நீர் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்படுகிறது. காஞ்சிபுரம் அருகே பழைய சீவரம் பகுதியிலிருந்து கணக்கிடும் போது விநாடிக்கு 1,25,000கன அடிநீர் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT