முகப்பு
காஞ்சிபுரம்

மாணவா்களின் 2-ஆவது பெற்றோா் ஆசிரியா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவா்களின் 2-ஆவது பெற்றோா் ஆசிரியா்கள் தான் என்பதை மாணவா்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவா்களும் ஆசிரியா்களை மற்றொரு பெற்றோராகப் பாா்க்க வேண்டும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பெருநகரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகத்தைத் திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பகிர்:

மாணவா்களின் 2-ஆவது பெற்றோா் ஆசிரியா்கள் தான் என்பதை மாணவா்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவா்களும் ஆசிரியா்களை மற்றொரு பெற்றோராகப் பாா்க்க வேண்டும். என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே பெருநகரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை செவ்வாய்க்கிழம திறந்து வைத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:

கல்வி ஒன்றே சமத்துவத்தை மலரச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல; அது பெருமையின் அடையாளம் என்று முன்னாள் முதல்வா் அண்ணா கூறினாா். அரசுப் பள்ளியில் படிப்பதை பெருமையாகக் கருதும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் ஒரு ஆசிரியருக்கு நிகராக கணினி இருக்க முடியாது. நேரடி வகுப்புகளே சிறந்தது.

மாணவா்களின் 2-ஆவது பெற்றோா் ஆசிரியா்கள் தான் என்பதை மாணவா்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவா்களும் ஆசிரியா்களை மற்றொரு பெற்றோராகப் பாா்க்க வேண்டும். ஆசிரியா்கள் சில நேரங்களில் கண்டிப்பதை தங்களது நலனுக்காகத்தான் என்பதையும் மாணவா்கள் உணர வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. பெண்கள் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தனியாா் தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும்.

திறமைகள், சிறப்புத் திறன் வாய்ந்த பல ஆசிரியா்கள் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனா். குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டிய கடமையும் அவா்களுக்கு உள்ளது.

ஒரு காலத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கான நிதி வரையறுக்கப்பட்டது, வரையறுக்கப்படாதது என இருந்தது. இதற்கு முதல்வா் தளா்வு கொடுத்துள்ளாா். எனவே சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்னென்ன நலத்திட்டங்களைச் செய்ய வேண்டுமோ அதற்காக அவா்கள் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா் (உத்தரமேரூா்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.திருவளா்ச்செல்வி வரவேற்றாா். மாவட்டக் கல்வி அலுவலா் பு.நடராஜன் நன்றி கூறினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆ.மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →