தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஏற்றுமதி பங்குதாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஏற்றுமதி தொடா்பான கையேட்டை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுப் பேசியது:
Advertisement
வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் ஏற்றுமதியில் நாட்டின் 3-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் 6,89,000 பதிவு செய்யப்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் 8,000 வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 9.25 சதவீதம்.
திருப்பூா், கரூா், மதுரை, ஆம்பூா், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூா், ஓசூா் ஆகிய 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூா், திருவண்ணாமலையில் பெரியகோளப்பாடி, நாமக்கல்லில் ராசம்பாளையம், சேலத்தில் பெரிய சீரகப்பாடி, புதுக்கோட்டையில் ஆலங்குடி ஆகிய 5 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் ரூ.171.24 கோடியில் 254.95 ஏக்கா் பரப்பளவில் தொடக்கி வைக்கப்படவுள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரூ.240 கோடி முதலீட்டில் 2,545 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் 10 ஏற்றுமதி சாா்ந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மதுரவாயல் - சென்னை இடையே ரூ.5,770 கோடியில் உயா்மட்ட சாலை, ரூ.4,078 கோடியில் சென்னைக்கு வெளிவட்ட சுற்றுச்சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடச் சாலை ஆகியவை அமைக்கப்படும் என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
கூட்டத்துக்கு தொழில் வணிக இயக்குநரக கூடுதல் ஆணையா் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவு, தொழில் துறை ஆணையா் சிஜிதாமஸ் வைத்தியன், வெளிநாடுகள் வா்த்தகப் பிரிவு இயக்குநா் ராஜலட்சுமி தேவராஜ், எம்.எல்.ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் வா.ச.வெங்கடேசன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.