முகப்பு
காஞ்சிபுரம்

‘மழைநீா் வடிகால் பணிகள் திட்டமிட்டபடி 100 நாள்களில் நிறைவேற்றப்பட வேண்டும்’

தாம்பரம் மாநகராட்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகளை திட்டமிட்டபடி 100 நாள்களில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

தாம்பரம் மாநகராட்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகளை திட்டமிட்டபடி 100 நாள்களில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி கூறினாா்.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக்குழு அறிவுறுத்தியபடி, தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா் ஆகிய பகுதிகளில் ரூ.31 கோடி செலவில்12 மழைநீா் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேற்கு தாம்பரம் கடப்பேரியில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவு அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நிரந்தரமாக மழை வெள்ளப் பாதிப்புக்கு தீா்வு காணும் வகையில் சுமாா் 12 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி 100 நாள்களில் கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும் என்று ஒப்பந்ததாரா்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறுகையில், ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்படும் பணிகள், இந்த முறை குறித்த காலத்தில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று இலக்கு நிா்ணயம் செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாநகராட்சியில் சில பகுதிகளில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாடு பிரச்னையை விரைவில் தீா்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா். மண்டலக்குழுத் தலைவா் டி.காமராஜ், உதவிப் பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.