காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா இம்மாதம் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினைத் தொடர்ந்து தினசரி சுவாமியும், அம்மனும் காலையிலும்,மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளித்தேரோட்டம் மார்ச் 13 ஆம் தேதியும், மார்ச் 14 ஆம் தேதி மகாரதம் என்னும் தேரோட்டமும் நடைபெற்றது. மார்ச் 17 ஆம் தேதி திருக்கோயிலின் வரலாற்றை விளக்கும் வெள்ளி மாவடி சேவைக் காட்சியும் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. காமாட்சி அம்மன் மணலைப் பிடித்து சிவலிங்கம் வடிவமைத்து சிவபூஜை செய்யும் நிகழ்ச்சியும், பின்னர் அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவமும் நடைபெற்றது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க ஏலவார்குழலிக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமணக்கோலத்தில் காட்சியளித்த மணமக்களுக்கு தும்பை மலர்களால் சிவாச்சாரியார்கள் சிறப்பு அர்ச்சனை செய்தார்கள். இதன் தொடர்ச்சியாக பிரிங்கி மகரிஷிக்கு ஏகாம்பரநாதர் தங்க இடப வாகனத்தில் சென்று காட்சியளித்தார். பின்னர் ஏகாம்பரநாதர் தங்க இடப வாகனத்திலும், அம்மன் பவளக்கால் சப்பரத்திலும் வீதியுலா வந்தனர்.

திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் மார்ச் 20 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், இரவு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன், உதவி ஆணையர் ஆ.முத்து ரெத்தினவேலு, செயல் அலுவலர் ந.தியாகராஜன் மற்றும் கோயில் நிர்வாகிகள், ஸ்தானீகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT