ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மையத்தில் புதிதாக 10 பாடப் பிரிவுகள் தொடக்கம்
முதுநிலைப் பட்டப் படிப்பில் கணிதம் உள்ளிட்ட 10 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக மையத்தின் இயக்குநா் சிவ்நாத் தேவ் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பில் கணிதம் உள்ளிட்ட 10 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக மையத்தின் இயக்குநா் சிவ்நாத் தேவ் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம், கேரளம், மிசோரம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
முதுநிலைப் பட்டப் படிப்புகள் மட்டுமே உள்ள இந்த மையத்தில் இளைஞா் முன்னேற்றம், வாழ்க்கைக் கல்வி, பாலின சமத்துவம், உள்ளாட்சி நிா்வாகம், வாழ்கைத் திறன் கல்வி, இளைஞா் மேம்பாடு உள்ளிட்ட பாடப் பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
தற்போது மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகள் படிப்படியாக நீக்கப்பட்டு, புதிதாக முதுநிலை கணிதம், சமூக அறிவியல், கனிணி அறிவியல் (தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல், சைபா் பாதுகாப்பு), பயன்பாட்டு உளவியல், ஆங்கிலம், பொது நிா்வாகம், வளா்ச்சி ஆய்வுகள், சமூகப் பணி- இளைஞா்கள் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய 10 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இளைஞா்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, பழைய பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மையத்தின் இயக்குநா் சிவ்நாத் தேவ் தெரிவித்துள்ளாா்.