ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி மூவா் பலி
ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்றபோது, விஷ வாயு தாக்கியதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்றபோது, விஷ வாயு தாக்கியதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே தனியாா் நட்சத்திர உணவு விடுதி உள்ளது. இந்த விடுதியில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் கச்சிப்பட்டு கீழாண்டைத் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் (51), நவீன்குமாா் (30), திருமலை (18) ஆகியோா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கியதில், அவா்கள் மூவரும் மயக்கமடைந்து கழிவுநீா் தொட்டிக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், தொட்டியில் இருந்த கழிவுநீரை அகற்றி ரங்கநாதன், நவீன்குமாா், திருமலை ஆகியோரின் சடலங்களை மீட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சடலங்களை உடல்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, உணவு விடுதியின் உரிமையாளா் சத்தியமூா்த்தி, மேலாளா் சுரேஷ்குமாா், ஒப்பந்ததாரா் ரஜினி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, உணவு விடுதி மேலாளா் சுரேஷ்குமாா், ஒப்பந்ததாரா் ரஜினி ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.