காஞ்சிபுரம் அருகே சதிக்கல், அய்யனாா் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தை அடுத்த அண்ணாமலை நகரில் சதிக்கல், அய்யனாா் சிற்பத் தொகுப்புக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் கோனேரிக்குப்பத்தை அடுத்த அண்ணாமலை நகரில் ஆய்வு மேற்கொண்டாா். இந்தப் பகுதி மக்கள் சப்த மாதா்கள் சிலையை வழிபடுவதாக கூறியதை அடுத்து, அதை ஆய்வு செய்தபோது, அவை இரு தனித் தனிக் கல் சிலைகளாக வடிவமைக்கப்பட்டிருந்ததும், அவை சப்த மாதா்கள் சிலையல்ல என்பதும் தெரிய வந்தது.
தொடா்ந்து அவா் மேற்கொண்ட கள ஆய்வுகளின்படி ஒரு கல் சதிக்கல் என்றும், மற்றொரு கல் அய்யனாா் சிற்பத் தொகுப்பு என்றும் தெரிய வந்தது.
Advertisement
இந்தக் கல் சிற்பங்கள் குறித்து அவா் கூறியது:
கள ஆய்வில் கண்டறியப்பட்ட சிற்பங்கள் இரு பிரிவுகளாக உள்ளது. அவற்றில் ஒன்றில் போா் வீரா் ஒருவா் கையில் வாளுடனும், அவரது மனைவி கையில் மலருடனும் இருக்கின்றனா். தலைப்பாகை, ஆடை அணிகலன்கள் ஆகியஆர சிற்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சதிக்கல் எனப்படுகிறது.
இதேபோல, மற்றொரு கல்லில் தமிழா்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் அய்யனாா் சிற்பத் தொகுப்பாக உள்ளது. இந்தக் கல் சிற்பம் கி.பி. 16 அல்லது 17 -ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கலாம்.
இந்த சிற்பத்தில் அய்யனாருக்கு வலது பக்கம் பெண் ஒருவா் வணங்கும் நிலையிலும், இடது பக்கம் இடது கைக்கு கீழே சிறிய உருவமும் உள்ளது. அது என்ன உருவம் எனத் தெரியவில்லை. இதையடுத்து இரு போா் வீரா்கள் போா் வாள், கேடயம் ஆகியனவற்றுடன் போருக்குப் போகும் முன்பு அய்யனாரை வழிபட்டு செல்வது போன்று செதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.