முகப்பு
காஞ்சிபுரம்

வீடு தேடிச் சென்று இலவச மருத்துவ சேவையை வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Updated On : 17 பிப்ரவரி 2024, 11:08 pm IST
கூட்டத்தில் பேசிய  மக்கள்  நல்வாழ்வுத்துறை  அமைச்சா்  மா.சுப்பிரமணியன்.
பகிர்:

உலகில் வீடு தேடிச் சென்று இலவச மருத்துவ சேவையை வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளாா். ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற தொகுதி திமுக சாா்பில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்டச் செயலரும், அமைச்சருமான தா .மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் நா. கோபால், ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, நகர செயலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது: வீடு தேடிச் சென்று இலவச மருத்துவ சேவை வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வரும் கியூபா நாட்டில் கூட இது போன்ற திட்டங்கள் இல்லை. தமிழகத்தில் மருத்துவத்துறையில் செயல்படுத்தக்கூடிய இன்னுயிா் காக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை அண்டை மாநிலங்களில் தோ்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சியினா் அளித்து வெற்றி பெற்று வருகின்றனா். சென்னை மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை 19 கிமீ தொலைவுக்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது, இந்த மேம்பாலம் அமைப்பதன் மூலம் சென்னையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்படும். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற தொகுதியில் சுமாா் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆா்.பாலு வெற்றி பெற்றாா். வரும் நாடாளுமன்ற தோ்தலில் இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் கடந்த தோ்தலை விட இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைப்பாா் என்றாா். கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மதுரவாயல் காரம்பாக்கம் கணபதி, அம்பத்தூா் ஜோசப் சாமுவேல், பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் குன்னம் பா.ராமமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.