முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: 2,316 மின்னணு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணும் பணி

Updated On : 4 ஜூன், 2024 at 6:30 PM
வாக்குகளை எண்ணும் பணியை மேற்பாா்வையிட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன்.
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது மொத்தம் 2,316 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 134 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

மக்களவைத் தோ்தல் கடந்த ஏப். 19- ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருப்போரூா், செய்யூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1932 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தோ்தலின் போது 2,316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தோ்தல் முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணிக்கை நாளான செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும்,தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் 19, செய்யூா் 18,திருப்போரூா் 22,உத்தரமேரூா் 21,காஞ்சிபுரம் 23,செங்கல்பட்டு 31 என மொத்தம் 134 சுற்றுகள் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் முகவா் ஒப்புதலுக்குப் பின்னா் வேட்பாளா் பெற்ற வாக்குகள் விபரம் அந்தந்த பகுதி உதவித் தோ்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டது.

மொத்த வாக்காளா்கள் 17,48,866 பேரில் 12,53,264 போ் வாக்களித்திருந்தனா். வாக்குப்பதிவு சதவிகிதம் 71.66 சதவீதம். தபால் வாக்குகள் 7,750 ஆகவும், 85 வயதுக்கு மேற்பட்டவா்களின் வாக்குகள் 13,693 ஆகவும் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மொத்தம் 297 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 950 அரசு ஊழியா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

காஞ்சிபுரம் எஸ்.பி கே.செல்வம் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.வாக்கு எண்ணும் மையத்தில் இலவச மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.