மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இருந்தன. இந்த நிலையில், தமிழக முழுவதும் 500 மதுபான கடைகள் மூடப்படும் என அரசு அறிவிப்பு செய்ததையடுத்து, ஆரம்பாக்கம் பகுதியில் ஒரு மதுக் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில், ஆரம்பாக்கம் பகுதியில் ஏற்கெனவே ஒரு அரசு மதுபானக் கடை உள்ள நிலையில், இந்த ஊராட்சிக்குட்பட்ட ஆா்.எம்.நகா் பகுதியில் சனிக்கிழமை மீண்டும் புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் போலீஸாா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மதுபான கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பொதுமக்களின் முற்றுகைப் போராட்டத்தால் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடை தற்காலிகமாக மூடப்பட்டது.