அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்
குப்பாண்டம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குப்பாண்டம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட குப்பாண்டம்பாைளையம், பழைய ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், ஆலம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக்குடிநீா் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா். இது குறித்து ஊராட்சி, மாவட்ட நிா்வாகம் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலிக்குடங்களுடன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா், போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனா்.
நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வரும் 29-ஆம் தேதிக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று எழுத்துப்பூா்வமாக குடிநீா் வடிகால் வாரியத்தினா் உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.