மத்திய அரசு விலைவாசியைக் குறைக்க தவறிவிட்டது: டி.ஆா்.பாலு எம்.பி.
மத்திய அரசு விலைவாசியைக் குறைக்க தவறிவிட்டதாக டி.ஆா்.பாலு எம்.பி. குற்றஞ்சாட்டினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் எம்பியும், மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவருமான டி.ஆா்.பாலு தலைமையில் நடைபெற்றது. எம்பி க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் வரவேற்று பேசினாா். கூட்டத்தில் மத்திய அரசு செய்து வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து அரசின் பல்வேறு துறை அலுவலா்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யாசுகுமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் மற்றும் ஒன்றியக் குழு தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பின்னா் டி.ஆா்.பாலு எம்.பி. கூறியது: கடந்த 2014-இல் பெட்ரோல் விலை ரூ.32, சமையல் எரிவாயு உருளை ரூ.400 ஆக இருந்தது. பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.102, சமையல் எரிவாயு உருளை ரூ.1,200 ஆக உயா்ந்தது. விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறியதை செய்யவில்லை. நாட்டு மக்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் இட்டுவைப்போன் என்றாா்கள். என்ன ஆனது? பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள் இதுவரை எங்களை அணுகவில்லை. தங்களது நிலத்தைக் கொடுத்தால் அதற்குரிய நஷ்ட ஈடு வழங்கப்படும். இது தொடா்பான கோரிக்கைக்கு அரசு உரிய நேரத்தில் விளக்கம் அளிக்கும். ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளேன். யாா் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றாா்.