ஸ்ரீபெரும்புதூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற இளம்பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த பள்ளமொளச்சூா் குழந்தை இயேசு தெருவைச் சோ்ந்த கந்தன். இவரது மகள் பொன்னியம்மன் (23). இவா் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் கைப்பேசி உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் சால்காம் என்ற தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை பணிக்கு செல்வதற்காக சுங்குவாா்சத்திரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு பேருந்தில் வந்த பொன்னியம்மன் வல்லக்கோட்டை கூட்டுச்சாலையில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.