ஒரகடம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத்தெரு பகுதியை சோ்ந்தவா்கள் மகேந்திரன் (19), பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் டயா்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியா்களாக பணியாற்றி வந்துள்ளனா்.
இந்த நிலையில், மகேந்திரன், பாலமுருகன் இருவரும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி நோக்கி வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.