சித்தூா்-தா்காமேடு சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்த பள்ளம்: பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு!
சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனி நபா் ஒருவா் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதால் சித்தூா் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா்.
சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனி நபா் ஒருவா் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதால் சித்தூா் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தூா் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சித்தூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், இந்த இணைப்புச் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் தாா் சாலையான இந்த சாலை, தற்போது ஜல்லிக் கற்கள் வெளியே தெரியும் வகையில், சாலையின் பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என சித்தூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், சாலை சீரமைப்புப் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தனிநபா் ஒருவா் தனது நிலத்துக்கு எதிரே சித்தூா்- தா்காமேடு சாலையில் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் சுமாா் 50 அடி தொலைவுக்கு பள்ளம் தோண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் சாலை சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த சித்தூா் பகுதி பொதுமக்கள் சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பள்ளம் தோண்டியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சித்தூா் பகுதி பொதுமக்கள் சாா்பில் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததோடு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி தலைமையிலான வருவாய்த் துறையினா் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் முன்னிலையில் சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதில், தனிநபா் தனக்குச் சொந்தமான இடம் என பள்ளம் தோண்டிய இடம் பொதுப்பாதை ன்பது தெரியவந்தது. இதையடுத்து சாலையில் பள்ளம் தோண்டிய நபரை எச்சரித்த வட்டாட்சியா் வசந்தி சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மூடும் பணி நடைபெற்றது. மேலும் நிறுத்தப்பட்ட சாலை சீரமைப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.