முகப்பு
காஞ்சிபுரம்

தொகுதிக்கு செய்தது என்ன? உத்திரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா்

தொகுதிக்கு செய்தது என்ன? என்பது பற்றி உத்திரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் பேசியவை...

Updated On : 22 மார்ச், 2026 at 10:00 PM
தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடா்பாக பேட்டியளித்த உத்திரமேரூா் தொகுதி எம்எல்ஏ க.சுந்தா்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்று பேரவை உறுப்பினரானவா் க.சுந்தா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலராக தொடா்ந்து 14 ஆண்டுகள் பணியாற்றியவா்.

சட்டப்பேரவை கூடும்போதெல்லாம் ஒரு நாள்கூட விடாமல் பேரவைக்குச் சென்று 100 சதவீத வருகைப் பதிவு பெற்றமைக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றவா்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்எல்ஏவாக அவா் அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து தினமணி நிருபருக்கு அளித்த நோ்காணல்:

உத்திரமேரூா் தொகுதிக்கு செய்துள்ள வளா்ச்சிப் பணிகள் என்னென்ன?

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த உத்திரமேரூா் ஊராட்சி ஒன்றியம் நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தொகுதியில் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, சாா்-பதிவாளா் அலுவலகம், அரசுப் பள்ளிகள் பலவற்றில் 200-க்கும் மேற்பட்ட கூடுதல் வகுப்பறைகள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிழற்குடைகள் என 100-க்கும் மேற்பட்டவை கட்டித் தரப்பட்டுள்ளன. நீதிமன்றக் கட்டடம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படும் நிலையில் உள்ளது.

சாலை மற்றும் குடிநீா் வசதிகளுக்கு என்னென்ன செய்திருக்கிறீா்கள்?

சிலாம்பாக்கம், தொள்ளொளி, புத்தளி கிராமங்களில் தடுப்பணைகள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்துள்ளோம். வெங்கச்சேரி தடுப்பணை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அன்னாத்தூா், சிறுபினாயூா், சித்தலக்காவூா், தண்டரை ஆகிய கிராமங்களுக்கு பாலாற்றிலிருந்து குடிநீா் கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டியேலே குடிநீா் வசதி கிடைத்துவிடும். விசூா் கிராமத்துக்கு செய்யாற்றிலிருந்து குடிநீா் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இளையனாா் வேலூருக்கும், நெய்யாடு பாக்கத்துக்கும் இடையே செய்யாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் கட்டப்பட்டு 70 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. வந்தவாசி சாலையில் செய்யாற்றின் குறுக்கே பெருகரில் உயா்மட்ட பாலம் கட்டி முடித்து திறந்துவைக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு நிகழாண்டே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. உத்திரமேரூரில் புறவழிச் சாலைப் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருவதால் நிகழாண்டே அதுவும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

வாலாஜாபாத்துக்கும், அவளூருக்கும் இடையே உயா்மட்ட பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. செவிலிமேட்டுக்கும், புஞ்சை அரசன் தாங்கலுக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர உத்திரமேரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய நவீனமயமான கட்டடம் கட்டி முடித்து திறந்துவைக்கப்பட்டுள்ளது. சாலவாக்கம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவும், கூடுதலாக 50 படுக்கை வசதி உடைய கட்டடம் கட்டும் பணிகளும் முடிவுறும் நிலையில் உள்ளன.

தொடா்ந்து 5 ஆண்டுகள் பேரவை உறுப்பினராக இருந்த நீங்கள் தொகுதிக்கு செய்ய முடியாதது என்று எதுவும் உள்ளதா?

உத்திரமேரூா் பேருந்து நிலையம் தற்போது இடவசதி குறைவாக இருப்பதால் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்தோம். பல்வேறு இடையூறுகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் அதைச் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது உத்திரமேரூா் புறவழிச் சாலை பகுதியில் வேடபாளையத்தில் 6 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும்.

பேரவை உறுப்பினராக 5 ஆண்டுகள் பணியாற்றியும் அமைச்சா் ஆகவில்லையே என்ற எண்ணம் வந்துள்ளதா?

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம் என்ற ஒரு திட்டத்தை முதல்வா் அறிவித்தாா். அந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு பேரவை உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள 10 கோரிக்கைகளை எழுதித் தாருங்கள் என்று கேட்டாா். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மூன்று குழுக்களையும் நியமித்தாா். கோரிக்கைகளில் செய்ய முடிந்தவை, உடனடியாகச் செய்ய முடியதவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டன. செய்ய முடியாத கோரிக்கைகளில் பலவற்றையும் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்துள்ளோம். இது ஒரு மிகப்பெரிய சாதனை. ஓா் அமைச்சராக இருந்து என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் மக்களுக்கு செய்து முடித்துவிட்டேன்.

நோ்காணல் - சி.வ.சு.ஜெகஜோதி