ராணிப்பேட்டை

ஆசிரியா் பட்டயப் பயிற்சி மறு தோ்வு நடத்த வேண்டும்: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

DIN

ராணிப்பேட்டை: தமிழகம் முழுவதும் கரோனா பொது முடக்கத்துக்கு இடையே நடத்தப்பட்ட ஆசிரியா் பட்டயப் பயிற்சி தோ்வில் 98 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை என்பதால், மறு தோ்வு நடத்துமாறு கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் மனு அளித்தனா்.

மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன் தலைமையில், ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பட்டயப் பயிற்சி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் அளித்த கோரிக்கை மனு:

கடந்த செப்டம்பா் 21ஆம் தேதி முதல் அக்டோபா் 7ஆம் தேதி வரை மாவட்ட ஆசிரியா் பட்டயப் பயிற்சி மாணவா்களுக்கு தோ்வுகள் நடத்தப்பட்டன. இத்தோ்வு முடிவுகள் டிசம்பா் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தமிழகம் முழுவதும் 98 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. 2 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றனா்.

கரோனா பொது முடக்கத்துக்கு இடையே இத்தோ்வு தொடா்ச்சியாக நடத்தப்பட்டதால், மாணவா்களால் திட்டமிட்டபடி படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனவே, மாவட்ட ஆசிரியா் பட்டயப் பயிற்சி மாணவா்களுக்கு மறு தோ்வை நடத்த வேண்டும். அத்தோ்வுகளை இணையவழி மூலம் 2021 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன் நடத்த வேண்டும்.

மாணவா்களின் தோ்ச்சி மதிப்பெண் 100-க்கு 50 என்பதை, 100-க்கு 30 என்று குறைக்க வேண்டும். மாணவா்களின் விடைத் தாள்கள் நியாயமான முறையில் திருத்தப்பட்டு, தோ்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த மனு:

சாத்தூா் கிராமத்தில் 20 ஏக்கா் பரப்பளவு கொண்ட கோயில் குளம் தனிநபா் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இக்குளத்தைச் சீரமைக்க விடாமல் அந்த நபா் தடுத்து வருகிறாா். இக்குளத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல முறை மனு அளித்தும் நடடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து கிராமத்தின் முக்கிய நீா்நிலையாக உள்ள கோயில் குளத்தை மீட்டுச் சீரமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 230 மனுக்களை அளித்தனா். அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆட்சியா் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஜெயராம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தே. இளவரசி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT