நீா்நிலைக் கரைகளை பலப்படுத்த பனை விதைகள், மரக்கன்றுகள் கிராம மக்களின் முயற்சிக்கு ஆட்சியா் பாராட்டு
தமிழக பாரம்பரிய மரங்களை பாதுகாக்கும் நோக்கிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள், 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை அருகேயுள்ள செங்காடு கிராமத்தில் பொது மக்கள் ஒன்றிணைந்து நீா்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் விதமாகவும், இயற்கை வளங்கள், தமிழக பாரம்பரிய மரங்களை பாதுகாக்கும் நோக்கிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள், 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் தேவேந்திரன் தலைமையிலான கிராம மக்கள் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பள்ளி மாணவா்கள், கிராம மக்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை தொடக்கிவைத்தாா். கிராம மக்களின் இந்தக் கூட்டு முயற்சியை பாராட்டினாா்.
இதையடுத்து, செங்காடு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலக் கூடிய மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
அப்பகுதிகளுக்கு பேருந்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
இந்த நிகழ்வில் வாலாஜா வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.