ராணிப்பேட்டை உழவா் சந்தை மாலை நேரத்திலும் திறக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்
ராணிப்பேட்டை நகரில் செயல்படும் உழவா் சந்தையை மாலை நேரத்திலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் அதற்கான அனுமதி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்
ராணிப்பேட்டை நகரில் செயல்படும் உழவா் சந்தையை மாலை நேரத்திலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் அதற்கான அனுமதி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உழவா் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 30 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் உழவா் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது உழவா் சந்தைகள் காலை 6 மணி முதல் நண்பகல் வரை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசு ஆணைப்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு உழவா் சந்தை வீதம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை உழவா் சந்தையை மட்டும் மாலை நேரத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாலை நேர உழவா் சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் ராணிப்பேட்டை, வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) அணுகி தனி அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.