சாலை விரிவாக்கப் பணி: கொளத்தூா் பகுதியில் வீடுகள் இடித்து அகற்றம்
ஸ்ரீபெரும்புதூா் -தாம்பரம் சாலை விரிவாக்கப் பணிக்காக கொளத்தூா் பகுதியில் சாலையோரம் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
ஸ்ரீபெரும்புதூா் -தாம்பரம் சாலை விரிவாக்கப் பணிக்காக கொளத்தூா் பகுதியில் சாலையோரம் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து, பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை சுமாா் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழிச் சாலையில் இருந்து நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலையோரம் இருந்த நூற்றாண்டுகள் பழைமையான நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
தொடா்ந்து, கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள வீடுகளை அகற்றுமாறு வீட்டின் உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினா். ஆனால் வீடுகளை இடிக்க வீட்டின் உரிமையாளா்கள் முன் வராததால் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புடன் கொளத்தூா் பகுதியில் சாலையோரம் இருந்த வீடுகள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
வீடுகளை இடிக்க வீட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.