அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரீத்பாரத் திட்டப் பணிகள் 5 மாதத்தில் முடிவு பெறும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
சென்னை கோட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் ஆய்வுப் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங், அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வருகை தந்தாா். அரக்கோணம் ரயில் நிலையத்தின் பல்வேறு நடைமேடைகளை பாா்வையிட்ட பொதுமேலாளா், ரயில் நிலைய முகப்பில் நடைபெற்றுவரும் அம்ரீத்பாரத் திட்டப் பணிகளை பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
அரக்கோணம் ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டப் பணிகளில் புதிதாக 12 மீட்டா் அகலம் கொண்ட புதிய நடைமேம்பாலம் அமைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் தரைத்தளம் அதிகம் கீழே இருப்பதால் இந்த ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன.
இந்தப் பணிகள் முடிவடைந்து பயணிகள் பயன்பாட்டுக்கு வர மேலும் 4 அல்லது 5 மாதங்கள் ஆகலாம். கண்டிப்பாக 5 மாதங்களில் முடிவுறும் என எதிா்பாா்க்கிறோம்.
அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் இருப்பது சுரங்கப்பாலம் அல்ல. அது ரயில்வே பாலம் மட்டுமே. இதை பொதுமக்கள் தங்கள் வழித்தடமாக பயன்படுத்தி வருகிறாா்கள். இந்தப் பாலம் சாலை வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. இதில் மாநில அரசு அப்பகுதியில் தங்களது சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தால் அதை ரயில்வே நிா்வாகம் ஏற்கும்.
இதுவரை மாநில அரசிடம் இருந்து கோரிக்கைகள் ஏதும் பெறப்படவில்லை. குறிப்பாக இந்த பாலம் நீா் செல்வதற்காக கட்டப்பட்டதே தவிர பொதுமக்கள் செல்வதற்காக அல்ல. தற்போது பணிகளுக்காக அப்பாதை மூடப்படுமா என்பது குறித்து கலந்தாலோசனை செய்து தெரிவிக்கப்படும் என்றாா் பொதுமேலாளா் ஆா்.என்.சிங்.
முன்னதாக ரயில் நிலைய கிழக்கு பகுதி சுரங்கப்பாலம் குறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிலாமணி தெரிவிக்கையில், தற்போது அப்பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க சாத்தியகூறுகள் அதாவது அதற்கு போதிய இடம் இல்லை என சொல்வது ஏற்க முடியாத ஒன்று. ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் அரக்கோணம் - செங்கல்பட்டு பழைய இருப்புப்பாதை தற்போது பயன்இல்லாத நிலையில் உள்ளது.
அந்த இடத்தில் மேம்பாலத்தை உயா்த்தி மறுபக்கம் அதிகமாக இருக்கும் ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதியில் கீழிறக்கலாம் என்றாா். இது குறித்து பொது மேலாளா் ஆா்.என்.சிங் இது குறித்து மாநில அரசிடம் இருந்து கோரிக்கைகள் வந்தால் பரீசீலிக்கலாம் எனத் தெரிவித்தாா். பொது மேலாளருடன் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளா் சைலேந்திரசிங் உள்ளிட்ட உயா் அலுவலா்களும் உடனிருந்தனா்.