ராணிப்பேட்டையில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி ராணிப்பேட்டை திருவள்ளுவா் சிலை அருகில் தொடங்கியது.
பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா். இப்பேரணியில் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியைச் சாா்ந்த மாணவிகள் மற்றும் தமிழறிஞா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய சாலைகள் வழியாக நவல்பூா் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.
நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) ஜெய ஜோதி, ராணிப்பேட்டை தமிழ்ச் சங்க பொதுச்செயலாளா் வழக்குரைஞா் த. தினகரன் மற்றும் தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.