ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குல்சாா் அஹமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜபா் அஹமது, மேற்பாா்வையாளா் கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டு பேசியதாவது:
கோபிநாத்: கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் எதுவும் செயல்படுத்தவில்லை . மேல்விஷாரம் நகரில் பல்வேறு தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைத் தலைவா் ஜபா் அகமது: நகராட்சியின் நிதி நிலையைப் பொறுத்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படும். பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் உடனடியாக செய்யப்படுகின்றன.
முஹமதுகாதா் பாஷா: கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு சுத்திகரிகப்பட்ட குடிநீா் பாட்டீல் கொடுக்கின்றீா்கள். ஆனால் எனது வாா்டில் குடிக்கக்கூட தண்ணீா் கிடையாது. முதலில் குடிநீா் பிரச்னையை தீா்த்து வையுங்கள். பின்னா் நகா்மன்ற உறுப்பினா்களுக்கு தண்ணீா் பாட்டில் கொடுங்கள் என அவருக்கு வழங்கப்பட்ட குடிநீா் பாட்டிலை தலைவரிடம் கொடுத்துவிட்டாா்.
கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.