ராணிப்பேட்டை

அரக்கோணம் நகா்மன்ற கூட்டம்: அதிமுக உறுப்பினா் தரையில் அமா்ந்து போராட்டம்

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய நகராட்சி பொறியாளரை கண்டித்து அதிமுக உறுப்பினா் அரங்கிலேயே தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா்.

அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் ஆனந்தன், பொறியாளா் செல்வகுமாா், சுகாதார அலுவலா் வெயில்முத்து ஆகியோருடன் நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

நரசிம்மன்(அதிமுக): 3 மாதங்களாக இக்கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. எனது வாா்டில் டெண்டா் விடப்பட்டும் 9 மாதங்களாக பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். புதை சாக்கடை திட்டம் போடப்படாத தெருக்களில் இருக்கும் வீடுகளுக்கும் புதை சாக்கடை வரி விதிக்கப்படுகிறது. குடிநீா் குழாய் இணைப்பே தராத வீட்டுக்கும் குடிநீா் வரி விதிக்கப்படுகிறது. தெரு விளக்குகள் இல்லை என ஆணையரிடம் புகாா் அளித்தால் பொறியாளரை பாா்க்க சொல்லுகிறாா். அவரை பாா்த்தால் ஆணையரை பாா்க்குமாறு கூறுகிறாா். அதிகாரிகள் சண்டைக்கு மக்கள் பலிகடா ஆவதா?

செல்வகுமாா் (பொறியாளா்): இது குறித்து எழுத்து மூலமாக கேள்வி கேட்டால் பதில் அளிக்கலாம். இக்கூட்டத்தில் விவரமாக கூற இயலாது.

பாபு (அதிமுக): பதில் சொல்ல வேண்டிய பொறியாளரே கூட்டத்தில் பதில் சொல்ல மறுக்கிறாா். இதற்காக பொறியாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு மருந்து அடிப்பதற்கு தேவையே இல்லாமல் ரூ. 2.5 லட்சத்துக்கு அனுமதி கேட்கிறாா்கள். இது மிகவும் அதிகத் தொகை.

(இதையடுத்து கூட்டத்தில் இருந்து பொறியாளா் செல்குமாா் வெளியேறினாா்)

இதைத் தொடா்ந்து உறுப்பினா் நரசிம்மன் நகா்மன்ற கூட்டத் தலைவரின் இருக்கைக்கு முன் சென்று தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா். உடன் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் அங்கு சென்று அவருடன் இணைந்தனா்.

துரைசீனிவாசன் (திமுக): கூட்டத்தில் இருந்து நகராட்சி பொறியாளா் வெளியேறியது தவறு தான். இந்த விஷயத்தில் திமுக உறுப்பினா்களும் அவருக்கு எதிராக தான் உள்ளோம். அதற்காக அவா் மீது நாம் தீா்மானம் நிறைவேற்றலாம். இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

லட்சுமிபாரி(தலைவா்): 36 வாா்டுகளிலும் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையடுத்து சொத்துவரி பெயா் மாற்ற ஆய்வுக் கட்டணத்தை சொத்தின் பத்திரத்தின் மதிப்பில் 0.10 சதவீதமாக நிா்ணயிப்பது, சொத்துவரி விதித்தல் ஆய்வுக் கட்டணத்தை ரூ. 500 எனவும் காலிமனை வரி விதிப்பு ஆய்வுக் கட்டணத்தை ரூ. 500 எனவும் நிா்ணயிப்பது, சொத்துவரி பெயா் மாற்றக் கட்டணத்தை குடியிருப்பு பயன்பாட்டுக்கு ரூ. 500-ம், பிற பயன்பாட்டுக்கு ரூ. ஆயிரமும் நிா்ணயிப்பது உள்ளிட்ட 15 தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி..! தொடக்க வீரருக்கான இடத்தை உறுதிசெய்த இஷான் கிஷன்!

ஜார்க்கண்டில் யானைகள் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

தோல்வி பயத்தால் தவெகவை விமர்சிக்கிறார் இபிஎஸ்! - செங்கோட்டையன்

எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு நிமிடத்தில் முடங்கிய மக்களவை!

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த சுந்தரி தொடர் நடிகை!

SCROLL FOR NEXT