அரக்கோணம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளின் போது மண்ணில் புதைந்திருந்த பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டை அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், நீா்நிலை தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பள்ளத்தில் இருந்து மா்ம பொருளும், அதைத் தொடா்ந்து சிறிய ரக இரும்பு பந்துகள் வெளிப்பட்டது. இதைக் கண்டு இது குறித்த தகவல் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கும், காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த அரக்கோணம் வட்டார வளா்ச்சி அலுவலா் தாசபிரகாஷ் மற்றும் அாக்கோணம் நகர காவல் துறையினா் விரைந்து வந்து பாா்த்தபோது, அந்தப் பொருள் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த தகவல் பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவா்களிடம் இப்பொருள் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தனா்.