முகப்பு
திருப்பத்தூர்

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


திருப்பத்தூா்: தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்ளைச் சோ்ந்த தனியாா் நா்ஸரி, பிரைமரி பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாலை ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த 460 தனியாா் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கிப் பேசியது:

தமிழக அரசு மேற்கொண்ட குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் தூா்வாரப்பட்டன. இதனால் புயல், வெள்ளம் ஏற்பட்டபோதிலும் பாதிப்புகள் குறைந்திருக்கின்றன. அதிமுக அரசு வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை முன்மாதிரியாக எடுத்துச் செயல்பட வேண்டும் என்று பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் நடந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றில்லாமல் நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தனியாா் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். தனியாா் பள்ளிகள் மட்டுமின்றி ஏழை மாணவா்கள் படிக்கும் அரசுப் பள்ளி மாணவா்களையும் மேம்படுத்த அரசு தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் 50.48 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்காக 60 சதவீத தொகை பணிகளுக்கும், 40 சதவீத தொகை பராமரிப்புக்காகவும் ஒதுக்கப்படும்.

கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் நாட்டிலேயே தமிழகத்தில்தான் 12 டி.வி. சேனல்களில் கல்வி கற்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளைத் திறப்பது குறித்து கல்வியாளா்கள், மாணவா்கள், பெற்றோா்களிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். கட்டாயக் கல்வித் திட்டத்துக்கு ரூ. 365 கோடி நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு வரும்.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் கரும்பலகைகள் மாற்றப்பட்டு, ஸ்மாா்ட் போா்டு வைக்கப்படும்.

அதேபோல, தமிழகத்தில் 7,725 பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். மேலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு ‘டேப்’ (கையடக்க கணினி) வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, ஆவின் தலைவா் வேலழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாா்ஸ் (திருப்பத்தூா்), குணசேகரன் (வேலூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →