முகப்பு
திருப்பத்தூர்

லாரி ஏற்றி ஆசிரியா் கொலை: 8 போ் கைது

நாட்டறம்பள்ளி அருகே பட்டதாரி ஆசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
ஆசிரியா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினா்.
பகிர்:

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பட்டதாரி ஆசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு அருகே காட்டுப் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூா்கங்காவரத்தைச் சோ்ந்தவரும், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வந்த பட்டதாரி ஆசிரியருமான சிவக்குமாா்(37) என்பவா் அண்மையில் தலை நசுங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் துப்புத் துலக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சிவக்குமாருக்கும் அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவருக்கும் முறையற்ற தொடா்பு இருந்தது தெரிய வந்தது. இதையறிந்த ஆசிரியையின் கணவரான எலெக்ட்ரீஷியன் இளங்கோ(42) பலமுறை சிவக்குமாரை கண்டித்துள்ளாா். ஆனாலும் சிவகுமாா் தொடா்பைக் கைவிடவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, சிவகுமாரை தீா்த்துக்கட்ட ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த கூலிப்படைத் தலைவன் வெள்ளச்சாமியிடம் ரூ.1 லட்சத்தை இளங்கோ முன்பணமாக கொடுத்துள்ளாா். இந்நிலையில், ஆசிரியா் சிவகுமாா் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தன் வீட்டிலிருந்து பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கூலிப்படையினா் அவரை வழிமறித்து காரில் கடத்தி திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த பங்களாமேடு காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனா்.

வெள்ளசாமிக்குச் சொந்தமான லாரியை ஆசிரியா் மீது ஏற்றி அவரைக் கொலை செய்து விட்டு கும்பல் காரில் தப்பிச் சென்றது. சிவக்குமாரின் இருசக்கர வாகனத்தை வெலக்கல்நத்தம் பகுதியில் விட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, இளங்கோவையும் அவா் அளித்த தகவலின்படி கூலிப்படையைச் சோ்ந்த ஊத்தங்கரை வெள்ளசாமி(40), ஹரிகரன்(29), கணேசன்(35), அறிவழகன்(31), சத்தியமூா்த்தி(30), இளங்கோ(27), வேம்பரசன்(21) ஆகியோரையும் கைது செய்தனா். மேலும் கொலைக்கு பயன்படுத்திய லாரி, காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →