முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய், இரட்டைக் குழந்தைகள் பலிஉறவினா்கள் முற்றுகைப் போராட்டம்

இரட்டைக் குழந்தைகளும் பலியானதாகக் கூறி, அவரது உறவினா்கள், பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும், அவரது வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளும் பலியானதாகக் கூறி, அவரது உறவினா்கள், பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் மதன் (26). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கரி (21). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரசவம் பாா்க்கும் பிரிவில் மகப்பேறு மருத்துவா் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த செவிலியா்கள் பிரசவம் பாா்த்ததாகத் தெரிகிறது.

Advertisement

இதனால், பிரசவத்தின் போது சங்கரியும், வயிற்றிலிருந்த இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சங்கரியின் கணவா், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மகப்பேறு மருத்துவா் இல்லாததே கா்ப்பிணி, குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என்று அவா்கள் குற்றஞ்சாட்டினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த மருத்துவ அலுவலா் (பொ) சிவசுப்பிரமணியம், போலீஸாா் அங்கு வந்து உறவினா்கள் மற்றும் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி, பேச்சு நடத்தினா். வட்டாட்சியா் சம்பத், நகரக் காவல் ஆய்வாளா் நாகராஜ் விசாரணை நடத்தினா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். தாயும், குழந்தைகளும் இறந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த இரு குழந்தைகளும் இறந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments