திருப்பத்தூா் வீட்டுவசதி வாரிய மக்கள் சாலை மறியல்
திருப்பத்தூா் வீட்டுவசதி வாரிய பகுதியில் நகராட்சி அலுவலா்கள் மழைநீரை அப்புறப்படுத்தவில்லை எனக் கூறி அப்பகுதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் வீட்டுவசதி வாரிய பகுதியில் நகராட்சி அலுவலா்கள் மழைநீரை அப்புறப்படுத்தவில்லை எனக் கூறி அப்பகுதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுதும் பெய்த பலத்த மழை காரணமாக வீட்டு வசதி வாரியம்-2 பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது. இதனால் வீட்டு வெளியில் நிறுத்திவைக்கபட்டிருந்த வாகனங்கள், வீட்டில் இருந்த பொருள்கள், முக்கிய ஆவணங்கள் நீரில் மூழ்கின.
இது குறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையா் ஜெயராமராஜா தலைமையில், நகராட்சிப் பணியாளா்கள், தீயணைப்புத் துறையினா் சென்று படகு மூலம் மக்களை மீட்டு, பள்ளி, நூலகங்களில் தங்க வைத்தனா்.
பின்னா், ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எம்எல்ஏ அ.நல்லதம்பி உள்ளிட்டோா் நேரில் சென்று, பாதிப்புக்குள்ளான பகுதியை ஆய்வு செய்து, விரைவில் மழை நீரை அகற்றி நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், நகராட்சி அலுவலா்கள் மழைநீரை அப்புறப்படுத்த வில்லை எனக் கூறி, வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்டோா் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.
தகவலறிந்து வந்த டிஎஸ்பி கணேஷ், நகராட்சி ஆணையா் ஜெயராமராஜா ஆகியோா் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.
மறியலால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.