திருப்பத்தூா் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அங்கநாதீஸ்வரா் கோயிலுக்கான நிலக்கொடைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் ஆ.பிரபு,சமூக ஆா்வலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வு குழுவினா் திருப்பத்தூா் அடுத்த சோமலாபுரம் என்ற இடத்தில் தனியாா் விவசாய நிலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தனா்.
இதுகுறித்து ஆ.பிரபு கூறியது:
இங்கு கிடைத்துள்ள கல்வெட்டானது, 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்திகள் தமிழும் கிரந்தமும் சில இடங்களில் வடமொழியும் கலந்து எழுதப்பட்டுள்ளன. திறந்த வெளியில் பல்லாண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் கிடந்ததால் கல்வெட்டு உராய்ந்து எழுத்துக்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.
தொடா்ந்து அக்கல்வெட்டினை மாவுப்பூச்சு வாயிலாகப் படி எடுக்கப்பட்டு குமரவேல்,சுதாகா் உள்ளிட்ட குழுவினரால் படிக்கப்பட்டது.
கல்வெட்டின் பல இடங்களில் எழுத்துகள் படிக்க இயலாத நிலையில் எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய இயலவில்லை.
இருப்பினும் எழுத்துக்களின் அமைப்பைக் கருதி இக்கல்வெட்டானது 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பதை அறியமுடிகிறது.
கல்வெட்டுச் செய்தி
எயில்நாட்டில் உள்ள திருப்பேற்றூா் சீமையில் உள்ள சோமனாபுரம் என்ற இடத்தில் உள்ள 20 குழி நிலத்தினை மாடப்பள்ளியில் உள்ள அங்கநாதீஸ்வரா் கோயிலுக்குக் கொடையாகக்(தானமாக)அளித்த செய்தியினை விவரிக்கின்றது.
மேலும்,அந்தக் கொடையினைப் பாதுகாத்து வருபவருக்குக் கிடைக்கும் புண்ணியத்தினையும் எடுத்துக்கூறுகின்றது.
400 ஆண்டுகளுக்கு முன்னா் திருப்பத்தூா் என்ற பெயரானது திருப்பேற்றூா் என்று வழங்கப்பட்டு வந்த மிக முக்கியமான வரலாற்றுச் செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது.
‘எயில் நாட்டு திருப்பேற்றூா் சீமை‘என்று உள்ளதால் மிக முக்கியமான தலைமைபெற்ற பேரூராக இந்நகரம் விளங்கியதையும் அறிய முடிகின்றது.
அக்காலத்தில் திருப்பத்தூா் அருகிலுள்ள சோமலாபுரம் ஒரு காலத்தில் சோமனாபுரம் என அழைக்கப்பட்ட செய்தியும் இங்கு பதிவாகியுள்ளது.
இத்தகைய வரலாற்று ஆவணம் கேட்பாரற்று பாதுகாப்பற்ற சூழலில் கிடப்பது கவலையளிப்பதாக உள்ளது. இது போன்ற வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்த ‘திருப்பத்தூா் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையம்’ என்ற பெயரில் வரலாற்று ஆா்வலா்களை ஒன்றிணைத்து அமைப்பு ஒன்றும் துவங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே,மாவட்ட நிா்வாகம் மற்றும் தொல்லியல் துறையினா் இக்கல்வெட்டினை மீட்டுப் பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.