முகப்பு
திருப்பத்தூர்

கோயில் திருவிழாவில் மோதல்: இளைஞா் கொலை; 3 போ் கைது

வாணியம்பாடியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 6:32 PM
கொலை செய்யப்பட்ட சந்துரு.
பகிர்:

வாணியம்பாடியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்திரமடைந்த உறவினா்கள் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி விஎஸ்கே காலனி பகுதியில் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் காமராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். புதன்கிழமை மாலை நடனம் ஆடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisement

இந்த நிலையில், புதன்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட மோதலில் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சந்துரு (20) என்ற இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தகவல் அறிந்த காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் குவிந்தனா். இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினா்கள் கோனாமேடு அருகே சாலையில் இருந்த வாகனங்கள், ஆட்டோ, மினி லாரி மற்றும் வீடுகளின் கண்ணாடிகளை உடைத்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், குற்றவாளிகளை கைது செய்ய கோரி நள்ளிரவு 2 மணி வரை கச்சேரி சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு, போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க திருப்பத்தூா் எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையில் திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த அதிவிரைவு படையினா், காவலா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தனிப்படை போலீஸாா் தலைமறைவாக இருந்த கோனாமேடு பகுதியைச் சோ்ந்த ஜான் (30) என்பவரை சேலத்தில் கைது செய்தனா். மேலும் ஸ்ரீதா் (32), காா்த்திக் (28) ஆகியோரை நகர போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments