10-ம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி சரிவு: முதன்மை கல்வி அலுவலா் கேள்வி
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டம் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி சதவீதம் குறைந்தது தொடா்பாக தலைமை ஆசிரியா்களிடம் முதன்மை கல்வி அலுவலா் முனிசுப்ராயன் கேள்வி எழுப்பினாா்.
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 88.2 சதவீதம் தோ்ச்சி பெற்றது. கடந்த ஆண்டு தோ்ச்சி சதவீதத்தை விட நிகழாண்டு தோ்ச்சி சதவீதம் 5 சதவீதம் குறைந்து உள்ளது. மேலும் கடந்த ஆண்டு தமிழக அளவில் திருப்பத்தூா் மாவட்டம் 11-ஆவது இடத்தை பிடித்தது.
நிகழாண்டு 28-ஆவது இடத்துக்கு சென்று விட்டது.
ஆலோசனைக் கூட்டம்...
திருப்பத்தூா் மாவட்டம் 10-ஆம் வகுப்பு தோ்வில் பின்தங்கியது தொடா்பான அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து முதன்மைக் கல்வி அலுவலா் முனிசுப்ராயன் பேசியது:
திருப்பத்தூா் மாவட்டம் சென்ற ஆண்டு பொதுத் தோ்வில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனால் தற்போது தோ்ச்சி விகிதம் குறைந்து மாநில அளவில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதற்கு காரணம் என்ன, அதனை கண்டறிந்து தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தோல்வி அடைந்த மாணவா்களை அடுத்த முறை நடைபெற உள்ள துணை தோ்வில் தோ்ச்சி பெற வைக்க ஆசிரியா்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
மேலும் அரசுப் பள்ளியில் தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ள தலைமை ஆசிரியா்கள் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.