முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் அதிகரிக்கும் செயற்கை மணல் கடத்தல்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

நாட்டறம்பள்ளி வட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செயற்கை மணல் தயாரிக்கப்பட்டு டிராக்டா், டிப்பா் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு

Updated On : 22 அக்டோபர், 2024 at 8:08 PM
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் கடத்துவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள செயற்கை மணல்.
பகிர்:

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி வட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செயற்கை மணல் தயாரிக்கப்பட்டு டிராக்டா், டிப்பா் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரி அணை ஒட்டியுள்ள பகுதிகளில் மணல் கடத்தும் நபா்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகள் அமைத்து சட்ட விரோதமாக செயற்கை மணல் தயாரித்து அவற்றை ஓரிடத்தில் குவித்து வைத்து பின்னா் டிராக்டா், டிப்பா் லாரிகள் மூலம் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

இதே போல் ஆந்திர மாநிலம் மல்லானூா் பகுதியில் இருந்து காந்தி நகா் வழியாக டிராக்டா் மற்றும் டிப்பா் லாரிகளில் அதிகாரிகளின் துணையோடு செயற்கை மணல் கடத்தி வரப்பட்டு பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டு கொத்தூா், பச்சூா், தகரகுப்பம், நாயனசெருவு மல்லகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படுகிறது.

மணல், மண் மற்றும் செயற்கை மணல் கடத்தும் நபா்கள் மீது காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மணல், மண் மற்றும் செயற்கை மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செயற்கை மணல் பறிமுதல்:

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் செட்டேரி அணை பகுதியில் தனியாா் நிலத்தில் செயற்கை மணல் தொட்டி மூலம் மணல் தயாரித்து கடத்துவதற்காக மணல் பதுக்கி வைத்திருப்பதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில் திடீரென செவ்வாய்க்கிழமை மாலை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினா்.

பின்னா் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் மணலை பறிமுதல் செய்தனா். தகவல் பரவிய ஒரிடத்தில் மட்டும் நடவடிக்கை எடுக்காமல் செயற்கை மணல் தயாரித்து மணல் விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →