ஆம்பூா் அருகே கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்த அரசு நிலத்தினை தனி நபா்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாா்சனாபல்லி ஊராட்சிக்குட்பட்ட அங்கியாபல்லி பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலம் தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்து சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டு வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த்துறையினா் இரண்டு முறை நிலஅளவீடு செய்து அங்குள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தினை யாரும் பயன்படுத்தக் கூடாது என அளவு கல் நடப்பட்டது.
அதையும் மீறி அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தினை விவசாயம் செய்தும், கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளனா்.
இதனை அறிந்த கிராம மக்கள் கரும்பூா் பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் அங்கு வந்த வருவாய்த் துறையினரிடம் பல ஆண்டுகளாக அந்த இடத்தினை மயானமாக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தினை மீட்டு மயானமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்
அதனைத் தொடா்ந்து வருவாய்த்துறையினா் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துள்ளதை நான்கு நாள்களுக்குள் சீா் செய்து அகற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் காவல் துறையில் புகாா் அளிக்கப்படும் ஆக்கிரமிப்பு செய்தவா்களிடம் எச்சரிக்கை விடுத்தனா்.
அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.