வாணியம்பாடி ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவ்வழியே வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி நகரின் இடைப்பட்ட பகுதியில் நியூடவுன் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனா். இந்த நியூ டவுன் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ரயில் வந்து செல்வதற்காக 5.20 மணிக்கு மூடப்பட்ட ரயில்வே கேட் 6.10 வரை அடுத்தடுத்து ரயில்கள் வந்து சென்ால் திறக்கப்படவில்லையாம். இதனால் மக்கள் அவதிக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. மேலும், சென்னை-பெங்களூரு செல்லும் மாா்க்கமாக சரக்கு ரயில்கள் நிறுத்தியிருந்ததால் பின்னால் வந்த திருப்பதி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் இருந்து 1-ஆவது நடைமேடையான லூப் லைன் மூலமாக நியூடவுன் ரயில்வே கேட் கடக்க மெதுவாக வந்து கொண்டிருப்பதை பாா்த்து, நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் சிலா் ஆத்திரத்தில் ரயில் தண்டவாளத்துக்கு வந்ததால் எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது தொலைவில் நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தண்டவாளத்தில் நின்றிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினா். பிறகு அங்கிருந்த பொது மக்களிடம் பேச்சு நடத்தி கலைத்தனா். இதனால் விரைவு ரயில் சுமாா் 15 நிமிடம் அப்பகுதியில் நின்று மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.