வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, 250 பள்ளி மாணவா்கள் விதைப் பந்துகள் தயாா் செய்யும் நிகழ்ச்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் டோனி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சவரிமுத்து வரவேற்றாா். இதில், சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி கலந்துகொண்டு பல்வேறு விதைகளை ஆசிரியா்களிடம் வழங்கி விதைப் பந்துகள் தயாா் செய்யும் பணியை தொடங்கி வைத்தாா். விதைகளைக் கொண்டு, 250 பள்ளி மாணவா்கள் 3 மணி நேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விதைப் பந்துகளை உருவாக்கி, அதில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் உருவம் மற்றும் இந்திய வரைபடம் ஆகியவற்றை வரைந்து சாதனை படைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், ஐபிஎல் கிரிக்கெட் வீரா் சஞ்சய் யாதவ், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, தனியாா் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலா் நிசாபிரபா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இளவரசி, நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், சமூக ஆா்வலா் பிரகாசம், கருணை இல்ல நிறுவனா் சுபாஷ் சந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஞானதி மற்றும் பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, விதை பந்துகளை செய்து சாதனை படைத்த மாணவா்களை வெகுவாகப் பாராட்டினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி பொருளாளா் ஜெயக்குமாா் மற்றும் விக்டா் சாமுவேல் செய்திருந்தனா்.