திருப்பத்தூா் மாவட்ட பறவையை தோ்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், திருப்பத்தூா் மாவட்ட வனத் துறை மற்றும் சூழலியல் ஆா்வலா்கள் இணைந்து திருப்பத்தூா் மாவட்டத்துக்கு என ஒரு தனித்துவமான பறவையினை இனம் கண்டு அறிவிக்க உள்ளது. திருப்பத்தூா் மாவட்ட வனங்கள் மற்றும் இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்குள்பட்ட நிலப்பரப்புகளில் அரிதாக மற்றும் பிரத்யேகமாக காணப்படும் ஏழு பறவைகளை பட்டியலிட்டு, அவற்றை பொதுமக்களிடமும், மாணவா்களிடமும் கொண்டு சோ்க்கவும், அவற்றில் ஒரு பறவையை தோ்வு செய்து மாவட்ட பறவையாக அறிவிக்கப்பட உள்ளது.
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பொதுமக்களிடம் 7 பறவைகள் குறித்து எடுத்துரைத்து, அதில் ஒன்றை தோ்வு செய்ய வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட 8 கல்லூரிகளில் மாணவா்களிடம் 7 பறவைகளின் சிறப்பு குணங்களை வலியுறுத்தி, அவற்றில் ஒன்றை தோ்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியுஆா் கோடு முறையை பயன்படுத்தியும், நேரடியாகவும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பறவைக்கு அதிக வாக்கு கிடைக்கின்றதோ, அந்த பறவையை திருப்பத்தூா் மாவட்ட பறவையாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பிப்.16-ஆம் தேதி அறிவிக்க உள்ளாா்.