முகப்பு
திருப்பத்தூர்

பெருமாள் கோவிலூா் நுழைவு வாயிலில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

பெருமாள் கோவிலூா் நுழைவு வாயிலில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

Updated On : 21 மார்ச், 2026 at 9:09 PM
தோ்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகை. பெருமாள் கோவிலூா் மக்களிடம் பேச்சு நடத்திய அரசு அதிகாரிகள்.
பகிர்:

ஜவ்வாதுமலை புதூா்நாடு அடுத்த பெருமாள் கோவிலூா் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோ்தலை புறக்கணிப்பதாக நுழைவு வாயிலில் அறிவிப்பு பதாகைகளை வைத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாதுமலை புதூா் நாடு அடுத்த புங்கம்பட்டுநாடு ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவிலூா் பகுதியில் 400 குடும்பங்களில் சுமாா் 1,200 மக்கள் வசிக்கின்றனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பதாகைகளை வைத்து உள்ளனா்.

அதில் தலைமுறை, தலைமுறையாக வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். குடிநீா் வழங்க வேண்டும். ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். மின்சார இணைப்பு வழங்க வேண்டும். பட்டா இல்லாத காரணத்தால் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியவில்லை. விவசாய கடன்கள் வாங்க முடியவில்லை.

மேலும், தொழில் தொடங்க வங்கிகளில் கடன் பெற முடியவில்லை. அரசு வீடு கட்டித் தரும் எந்தவித நலத்திட்டங்களை எங்களுக்கு கிடைக்கவில்லை.இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும். நிறைவேற்றி தரும் வரை தோ்தலை புறக்கணிப்போம். என கூறப்பட்டிருந்தது.

தகவல் அறிந்த திருப்பத்தூா் வட்டாட்சியா் நவநீதம் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், வனச்சரகா் சோழராஜன்,கிராமிய ஆய்வாளா் ஜான் பிரிட்டோ ஆகியோா் அங்கு சென்று ஊா் மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் வீடு கட்டி இருப்பதால் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வீட்டு வரி ரசீது, குடிநீா், சாலை ஆகியவை ஒருவாரத்தில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.அதற்கு கோவிலூா் மக்கள் முதலில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றினால் தான் வரும் தோ்தலில் பங்கேற்று வாக்களிப்போம் என தெரிவித்தனா்.