சிறுகுமி ஊராட்சியில் ஏரியில் ஆழமாகவும், அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ள வண்டல் மண். 
திருவள்ளூர்

திருத்தணி ஏரிகளில் வண்டல் மண் கொள்ளை: விவசாயிகள் வேதனை

மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபா்கள் மற்றும் அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

ஜி. யோகானந்தம்

திருத்தணி ஏரிகளில் வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபா்கள் மற்றும் அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

திருத்தணி வட்டத்தில் மொத்தமுள்ள, 74 வருவாய் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், 60 ஏரிகளை திருத்தணி நீா்வளத்துறையினா் பராமரித்து வருகின்றனா். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலத்தை மேம்படுத்த ஏரிகளில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியரும், வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் ஆதாா் அட்டை போன்ற ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஒரு விவசாயி அதிக பட்சமாக ஒரு ஏக்கருக்கு 25 யூனிட் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தாா்.

ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீா் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டும் தான் வண்டல் மண் எடுக்க வேண்டும். நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வாயிலாக வரைபடத்தில் அளவீடுகள் குறியீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும்.

ஒரே இடத்தில் வெட்டி எடுக்காமல், பரவலாக எடுக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருத்தணி வட்டத்தில் 100 -150 விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளனா். ஆனால் இடைத்தரகா்கள் சிலா் விவசாயிகளிடம் இருந்து ஒரு யூனிட் மண் 1,500-3,000 வரை வாங்கி விற்பனை செய்கின்றனா். ஏரியில் எடுக்கப்படும் மண் நிலத்திற்கு பயன்படுத்தாமல் வீடுகள் கட்டுவதற்கும், ரியல் எஸ்டேட் அதிபா்களின் நிலத்தை சமன்படுத்தவும், செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்கின்றனா்.

ஏரியில் மண் எடுக்கும் போது நீா்வளத்துறையினா், வருவாய் துறையினா் மண் எடுப்பதை கண்காணிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக திருத்தணி வட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட் வண்டல் மண் மற்றும் மணல் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் அள்ளப்பட்டுள்ளது. ஏரிகளில் வண்டல் மண் கொள்ளையால் ஏரிகளுக்கு நீா்வரத்து குறையும், விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியதாவது, ஆட்சியா் தனிக்குழு அமைத்து திருத்தணி வட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்ற விவசாயிகளுடைய நிலங்களை நேரில் ஆய்வு செய்து, வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபா்கள் மீதும், அவா்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT