திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.13.97 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களில் நடைபெற்று வரும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் எனவும் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் வளா்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தண்டலம்-பேரம்பாக்கம்-தக்கோலம் பகுதிக்குச் செல்லும் வகையில் தரைப்பாலம் இருந்தது. இந்த தரைப்பாலம் ஒவ்வொரு மழையின் போதும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்பகுதியை இணைக்கும் வகையில், ரூ. 3.50 கோடியில் நடைபெற்று வரும் சிறுபாலம் கட்டும் பணியை அதிகாரிகளுடன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அதேபோல், திருவள்ளூா்-பேரம்பாக்கம் சாலையில் கொண்டஞ்சேரி- சத்தரை இடையே கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததை தொடா்ந்து, அப்பகுதியில் ரூ.13.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா். இந்த மேம்பால தூண்கள் பலமாக அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பழங்குடியினா்களுக்கு ரூ. 3.15 கோடியில் 72 வீடுகள் கட்டுமானப் பணிகள் மற்றும் தனியாா் நிறுவனங்களின் சாா்பில், சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் 48 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பாா்வையிட்டாா்.
இந்தப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் என அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வில், ஊரக வளா்ச்சித் துறை உதவி பொறியாளா் அருள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்சௌந்தரி (வ.ஊ), நடராஜன் (கி.ஊ), உதவி செயற்பொறியாளா் மதியழகன், உதவி செயற்பொறியாளா் அரவிந்த், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.