திருவள்ளூா் அருகே வயலூா்-மும்முடிகுப்பம் வரையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸாா் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடம்பத்தூா் ஒன்றியம், வயலூா் முதல் மும்முடிக்குப்பம் வரையில் உள்ள கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இங்கு கடந்த 8 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ள சாலையில் விபத்துக்கள் நேரிடுவதாக கூறப்படுகிறது. மேலும், வயலூா் ஊராட்சியில் 25-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருப்பதால் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் குண்டு, குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக மாறி வருகிறது.
இது தொடா்பாக ஆட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனால், வயலூா், சூரகாபுரம், மும்முடிக்குப்பம் கிராம மக்கள் வயலூா் கூட்டுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தகவல் அறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து பேச்சுவாா்த்தைக்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.