திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு திடலில் குடியரசு நாளையொட்டி தேசியக் கொடியேற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஏற்றார்.
தொடர்ந்து, பயனாளிகள் 26 பேருக்கு ரூ. 36.53 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு திடலில் திங்கள்கிழமை குடியரசு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆட்சியர் மு. பிரதாப் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார்.
தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். தொடர்ந்து சமதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர். பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
அதையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அதேபோல், தமிழக காவல் துறையில் சாதனை புரிந்த காவலர்களுக்கு தமிழக முதல்வரின் பதக்கங்கள், சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறை, தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ. 33,450 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ. 69,850 மதிப்பிலும், தாட்கோ மூலம் 4 பேருக்கு ரூ. 30.81 லட்சம் மதிப்பிலும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ. 2.55 லட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 5 பேருக்கு ரூ. 2.13 லட்சம் மதிப்பிலும் என 26 பேருக்கு மொத்தம் ரூ. 36 லட்சத்து 53 ஆயிரத்து 635 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இதில் நிறைவாக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சேகர், நேர்முக உதவியாளர்கள் காயத்ரி சுப்பிரமணியம் (பொது), மாலதி (தேர்தல்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.