போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம்: செங்கம் டிஎஸ்பி எச்சரிக்கை
செங்கத்தில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர்
செங்கத்தில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி எச்சரித்தார்.
செங்கம் துக்காப்பேட்டை பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை, இராஜ வீதி சார் - பதிவாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் அந்தப் பகுதிகளில் கார், வேன், பேருந்து ஆகிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பொதுமக்களும், வியாபாரிகளும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். மேலும், அவ்வப்போது இந்தப் பகுதிகளில் விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை துக்காப்பேட்டை பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை, இராஜ வீதி சார் - பதிவாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், மேற்கூறிய 3 பகுதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்தினால், அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்களின் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி எச்சரித்துள்ளார்.