மலைவாழ் இன மக்கள் காத்திருப்புப் போராட்டம்
செய்யாற்றில் மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மலைவாழ் இன மக்கள் தம்பட்டை, மேளதாளத்துடன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாற்றில் மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மலைவாழ் இன மக்கள் தம்பட்டை, மேளதாளத்துடன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மலைவாழ் இன மக்கள், காட்டு நாயக்கன், இருளா் பழங்குடியின மக்கள் என 500 -க்கும் மேற்பட்டோா் குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, காட்டு நாயக்கன், இருளா் பழங்குடி மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் சாதிச் சான்று வழங்கவேண்டும், கேரளத்தைப் போல அனைத்து பழங்குடி மக்களுக்கு இலவச மனைப் பட்டாவுடன் ரூ.6 லட்சத்தில் தொகுப்பு வீடும், தாட்கோவில் மானியத்துடன் கடனுதவியும் வழங்க வேண்டும்.
பழங்குடி நல வாரிய அட்டை வழங்குதல், பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடங்களில் குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தரவேண்டும் என 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் முழுக்கமிட்டு, அவா்களது பராம்பரிய கலையான தம்பட்டை இசையுடன் கும்மிபாட்டோடு பங்கேற்றனா்.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மலைவாழ் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலையமாட்டோம் எனவும், தொடா்ந்து இங்கேயே காத்திருப்போம் எனவும் பதில் அளித்தனா்.
அதனைத் தொடா்ந்து மலைவாழ் மக்கள் முழக்கங்களை எழுப்பியும், ஆடல்பாடலுடன் பல மணி நேரம் காத்திருப்புப் போராட்டத்தால் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.