தமிழகத்தில் புதிதாக 11,131 பிராணவாயு படுக்கைகள்பயன்பாட்டுக்கு வந்துள்ளன: அமைச்சா் எ.வ.வேலு தகவல்
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக 11,131 பிராணவாயு படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநில பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக 11,131 பிராணவாயு படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநில பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டாா். கரோனா நோயாளிகளுக்கான உள் நோயாளிகள் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு ஆகியவற்றில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பிராணவாயு படுக்கை வசதிகள், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் மருத்துவா்களுடன் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் சராசரியாக தினமும் 250 முதல் 300 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 685 பேருக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தமுள்ள 1,000 படுக்கைகளில் கரோனா சிகிச்சைக்காக 675 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 405 படுக்கைகளில் பிராணவாயு வசதி உள்ளது. 71 படுக்கைகளில் செயற்கை சுவாசக் கருவி (வெண்டிலேட்டா்) வசதி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரை 22,571 பிராணவாயு படுக்கைகள் இருந்தன. திமுக தலைமையிலான புதிய அரசு பொறப்பேற்ற பிறகு அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 14,133 பிராணவாயு வசதி கொண்ட படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 11,131 பிராணவாயு படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இத்துடன் சோ்த்து தமிழகத்தில் மொத்தம் 33,702 பிராணவாயு வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன.
தோ்தல் வாக்குறுதிகள்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேலூா் - செங்கம் புறவழிச் சாலையை இணைக்கும் பணி, செங்கம், வேட்டவலத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணி, திருவண்ணாமலை - அவலூா்பேட்டை சாலை ரயில்வே கடவுப் பாதை மற்றும் திருவண்ணாமலை - வேட்டவலம் சாலை ரயில்வே கடவுப் பாதை ஆகிய 2 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, தேவைப்படும் இடங்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.
ஆய்வின்போது, தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனை முதல்வா் திருமால்பாபு, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஷகீல் ஹகமது மற்றும் மருத்துவ அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.