ரூ.1.75 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை நகரில் ரூ.1.75 கோடியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை நகரில் ரூ.1.75 கோடியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் உள்ள 4 முக்கியச் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிா்க்கவும், கிரிவலப் பாதையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பாதுகாப்பாக செல்லவும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், 2019-2020ஆம் ஆண்டு சாலை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ.1.75 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை நகராட்சிக்குள்பட்ட அண்ணா நுழைவு வாயில், திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலை, அறிவியல் பூங்கா, சண்முகா தொழில்சாலை மேல்நிலைப் பள்ளி, கிரிவலப் பாதையில் உள்ள அபயமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்துதல், வடிகால் அமைத்தல், சாலையின் நடுவே தடுப்பு திட்டுகள் அமைத்தல், ரவுண்டான அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை தரமாகவும், அதேநேரத்தில் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏ மு.பெ.கிரி, நெடுஞ்சாலைத்துறையின் கோட்டப் பொறியாளா் கே.முரளி, மருத்துவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், நகர திமுக செயலா் பா.காா்த்திவேல்மாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.